ரிலீஸுக்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் 'கூலி'!
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளட்ட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து கூலி படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். கூலி படத்தின் முதல் பாடலான 'Chikitu' ஏற்கனவே இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. இப்படம் வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்பட்ட தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போவது உறுதி.
அதாவது, இதுவரை வெளிநாடுகளில் எந்த தமிழ் திரைப்படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு, ‘கூலி’ திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புகழ்பெற்ற நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்தப் படத்தின் உலகளாவிய விநியோகத்தை கைப்பற்றியுள்ளது. உலகெங்கிலும் 130க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ள ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்திய சினிமாவை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சென்றதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்த 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) திரைப்படத்தை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும், ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவரா' திரைப்படத்தை 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும் அவர்களின் சமீபத்திய முயற்சிகளில் ஒன்றாகும். கூலி படத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதன்படி, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கூலி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படம் உலகம் முழுவதும் அதிகமான நாடுகளில் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் இப்படம் இந்திய சினிமா ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக இருக்க போகிறது .