“நான் நடிகனாக காரணமே இவர்கள்தான்...” - பழைய நினைவுகளை பகிர்ந்த ரஜினிகாந்த்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். கடந்த பொங்கலன்று நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அவர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் படித்த பள்ளியில் முன்னாள் மாணவர்களுக்கான கொண்டாட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க முடியாத அவர், வீடியோ வெளியிட்டு பள்ளி மற்றும் கல்லூரி கால நினைவுகளை கன்னடத்தில் பேசி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது,
“உங்களுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் பான்காங்கில் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஏபிஎஸ் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தது எனக்கு பெருமை. முதலில் கவிப்பர் நடுநிலைபள்ளியில் கன்னட மீடியத்தில் படித்தேன் . அங்கு நான் நன்றாகப் படித்து 98% மதிப்பெண் எடுத்தேன்.
அதனால் என் அண்ணன் ஏபிஎஸ் ஆங்கில மீடியத்தில் சேர்த்தார். கன்னட மீடியத்தில் படித்து முதல் பெஞ்சில் இருந்த நான் அங்கு கடைசி பெஞ்சிற்கு மாற்றப்பட்டேன். அதனால் மன உளைச்சலான நான் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தேன். பின்பு சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று தேர்ச்சி பெற்றேன்.
பள்ளியில் என்னுடைய மதிப்பெண் குறைவாக இருந்தபோதிலும் ஏபிஎஸ் கல்லூரில் சேர்ந்தேன். சில காரணங்களால் கல்லூரி படிப்பைத் தொடரமுடியவில்லை. பள்ளி காலங்களில் போட்டிகளில் பங்கேற்பேன். வகுப்பில் நான் பார்த்த படங்களைப் பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடி நடித்து காட்டுவேன். இது என்னுடைய ஆசிரியர்களுக்கு நன்கு தெரிந்திருந்ததால் நாடகத்தில் பங்கேற்க அனுமதித்தார்.
அந்த நாடகத்தில் நடித்தற்காக எனக்கு சிறப்பு நடிகருக்கான விருது கிடைத்தது. அது இப்போது என்னுடைய தொழிலானதால் முடிந்தவரை குழந்தைகளை மகிழ்விக்க உதவுகிறது. இதற்கெல்லாம் ஏபிஎஸ் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம். அங்கு கழித்த நாட்களையும் விளையாடிய விளையாட்டுகளையும் என்னால் மறக்க முடியாது”
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.