ராஜஸ்தான் தீ விபத்து - பிரதமர் மோடி இரங்கல்!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு நேற்று (அக்.14) மதியம் சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 57 பேர் பயணம் செய்தனர். அந்த பேருந்து ஜோத்பூர் - ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென எரிந்து பேருந்து முழுவதும் பரவிய நிலையில் பேருந்தில் பயணித்த 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"ஜோத்பூரில் நடைபெற்ற பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.