ராஜமெளலி - மகேஷ் பாபுவின் படத்தை புகழ்ந்து தள்ளிய ராம்கோபால் வர்மா!
ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள புதிய படம் குறித்து ராம் கோபால் வர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.
பாகுபலி பாகம் 1 மற்றும் 2ன் மூலம் 1000 கோடி ரூபாய் வசூல் என்ற புதிய மைல் கல்லை தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸில் அறிமுகப்படுத்தி வைத்தவர் இயக்குநர் ராஜமௌலி. அதன் பிறகு பிரசாந்த் நீலின் கே.ஜி.எஃப் 1&2, ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்திய திரை உலகையே பிரமிக்க வைத்தது. ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பிறகு அடுத்ததாக ராஜமௌலி எந்த கதாநாயகனுடன் இணையப் போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் 29ஆவது படத்தை ராஜமௌலி இயக்குவார் என்ற தகவல்கள் வெளியாகின. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த கூட்டணி குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால் இதற்கிடையில் இந்த கூட்டணி குறித்து ராஜமௌலியின் தந்தை பேசியிருந்தார்.
இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக நவீன தொழில்நுட்பத்தில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் எடுக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
சமீபத்தில் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் இந்தப் படத்தினை நாங்கள் தயாரிக்கவில்லை என மறுத்து அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இந்தப் படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாயகனுக்கு இணையான கதாபாத்திரம் என்றும் இதற்கான ஒப்பந்தத்தில் பிருத்விராஜ் கையெழுத்திட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, "ராஜமௌலியின் அடுத்த படம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இதுவரை எடுக்கப்பட்டுள்ள எல்லா படங்களையும் விட டாப் ஆக இருக்கும்” என்று கூறியதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் 1000 கோடி என்பதால் நடிகர் மகேஷ் பாபும் இதில் தயாரிப்பாளராக இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.