தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று (ஜன.07) முதல் தென் மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஜன.13-ம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். இன்று (ஜன.08) திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழையான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் இயல்பை விட 4 சதவீதம் அதிகளவில் மழைப் பதிவாகியுள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும். வட உள் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.