காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை - ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக 14,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று பிற்பகல் வரை அதே நிலையில் நீடித்தது. இந்நிலையில் மழையின் காரணமாக நேற்று மாலை முதல் திடீரென நீர்வரத்து உயரத் தொடங்கியது.
நேற்று மாலை 17000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 19000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.