#RainAlert | காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.இந்த தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, புயல் பாதித்த பகுதிகளை தவிர மற்ற மாவட்டங்களில் இயல்பான சூழல் திரும்பியுள்ளது. சென்னையில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று இரவு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கு இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.