#RainAlert | கேரளாவில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
கேரளாவில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில தினங்களாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த சூழலில், வடக்கு கேரளா கடற்கரையிலிருந்து தெற்கு குஜராத் கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடமேற்கு வங்கக்கடலில் வரும் செப்.5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்தில் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருவனந்தபுரம், கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனுடன் இந்த பகுதிகளில் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.