#RainAlert | பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது மணிக்கு 18 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.