#RainAlert: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் காலை 10 மணிவரை 19 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.