#RainAlert | அடுத்த 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது-
மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இது ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்துக்கு கிழக்கே 280 கி.மீ தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கே 230 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை ஒடிசா மாநிலம் பூரி, மேற்கு வங்க மாநிலம் திகா கடற்கரை இடையே கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நாகமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.