#RainAlert | அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (செப்.7) காலை 8.30 மணியளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. மேலும் இது வடக்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (செப்.9) வாக்கில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமானது, அடுத்த 3 தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம்-வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செப்.13ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.