#RainAlert | “தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் (தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஆக. 15) முதல் வரும் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இன்று (ஆக. 15) முதல் ஆக. 19-ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இன்று முதல் ஆக. 17-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.