#RainAlert | 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
"இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 110 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 530 கிமீ தொலைவிலும் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி வரை மழை நீடிக்கும். இன்று (நவ.28), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (நவ.29) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்"
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.