Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WeatherUpdate | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை!

06:39 AM Oct 20, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகாலையில் கனமழை கொட்டியதால் இதமான சூழல் உருவானது.

Advertisement

சென்னையில் கடந்த சில நாட்களாக காலை, இரவு மற்றும் அதிகாலை என மாறி மாறி மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இரவில் சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை இருந்தது. இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சென்னை கிண்டி, ஆலந்தூர்,வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்தது.

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. மழை காரணமாக சென்னையில் வெப்பம் தணிந்து இதமான சூழல் ஏற்பட்டது. இதேபோல், சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருமழிசை, செம்பரம்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, பேருந்து நிலையம், சுங்குவார்சத்திரம், ஶ்ரீபெரும்புதூர், ஒரகடம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்தது.

ராணிப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதிகளில் பெய்த மழையால்,அங்குள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சிவகங்கை மாவட்டத்திலும் இரவில் பெய்த கனமழையால் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியது. கொடியாஞ்சி, அம்பலூர், பெரியப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

இதற்கிடையே, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement
Next Article