சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை!
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை (புதன்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இதன்காரணமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடையும்.
இதன் காரணமாக, இன்று (செவ்வாய்க்கிழமை) கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், கேரள பகுதிகளில் வருகிற 27-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.