தொடர் மழை எதிரொலி - காய்கறிகளின் விலை திடீர் உயர்வு!
தொடர் மழையின் காரணமாக, வரத்து குறைந்து காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில், முன்பைவிட வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மழை பெய்தால் நன்றாக இருக்கும் என மக்கள் மழையை எதிர்பார்த்தனர். இந்நிலையில் கோடை மழை தொடங்கியுள்ளது.
பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் வியாபாரங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தை உள்ளது. இங்கு எப்போதும் மலிவான விலையில் கிடைக்கும் காய்கறிகள் இன்று விலையேற்றத்துடன் விற்கப்படுகின்றன.
ஒரு கிலோ வெங்காயம் ரூ. 30 லிருந்து 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 லிருந்து 70 ரூபாய்க்கும், தக்காளி 30 லிருந்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேரட் 50 லிருந்து 60 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 35 லிருந்து 45 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு 75 லிருந்து 85 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 60 லிருந்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு கிலோ ரூ.380க்கு விற்பனையாகிறது.