Rain Alert | சம்பவம் செய்யப்போகும் மழை... கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!
தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவடையக்கூடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடக்கு திசையில் நகர்ந்து சென்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இது தொடர்ந்து, கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மேலும், இன்றும் நாளையும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 25) மற்றும் நாளை (மே 26) : நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 25) மற்றும் நாளை (மே 26) : தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர், திண்டுக்கல், உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி அவலாஞ்சியில் 21.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் எமரால்டு 9.4 சென்டிமீட்டர் மழையும், பந்தலூரில் 9.3 சென்டிமீட்டர் மழையும், சேரங்கோட்டில் 9 சென்டிமீட்டர் மழையும், தேவாலவில் 8.7 சென்டிமீட்டர் மழையும், கூடலூரில் 7.1 சென்டிமீட்டர் மழையும் உதகையில் 40. 4 சென்டிமீட்டர் மழையும் என ஒட்டுமொத்தமாக நீலகிரி மாவட்டத்தில் 1378. 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், கோவை, நீலகிரியில் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.