ரயில்வேயின் ‘Super App’ : அனைத்து வசதிகளும் ஒரே செயலியில்!
இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியின் கீழ் கொண்டு வர, புதியதாக செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்திய ரயில்வேயில் தற்சமயம் ரயில்வேயில் டிக்கெட் வாங்குவதற்கும், ரயில் வருகையைக் கண்காணிப்பதற்கும் பத்துக்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒரே செயலியின் கீழ் கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதாவது இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியின் (ஆப்) கீழ் வரவுள்ளன.
ரயில்வே துறை உருவாக்கியுள்ள ‘சூப்பர் ஆப்’ விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.90 கோடி செலவில் புதிய ஆப் தயாராகி வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செயலியை ரயில்வேயின் ஐடி துறையே உருவாகியுள்ளது. தற்போது ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட் புக்கிங் (யுடிஎஸ்), ரயில்களின் நேரத்தகவல் போன்ற பல ஆப்ஸ்களில் கிடைக்கிறது.
இந்தப் பயன்பாடுகள் அனைத்தும் நூறாயிரக்கணக்கான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளன. இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய சூப்பர் ஆப் விரைவில் வெளியாகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.