#Arakkonam அருகே தண்டவாளத்தில் விரிசல் | ரயில்வே ஊழியரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!
அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டறிந்து ரயில்வே ஊழியர் சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக சென்னைக்கு, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயில் புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் வழக்கத்திற்கு மாறாக சப்தம் கேட்டது. இதனை கவனித்த ரயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு சத்தமிட்டார்.
ஆனால் ரயில் வேகமாக சென்றுகொண்டிருந்ததால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுக்குமாறு ரயில்வே ஊழியர் கூறியிருக்கிறார். அதன்படி, பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததும் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், அருகே சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ரயில்வே ஊழியர் சாதுரியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக ரயில்வே பணியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பணியாளர்கள், சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் 30 நிமிடம் தாமதமாக மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.