சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் - சென்னை காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு!
காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை
செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருணை, சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது, நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வது மற்றும் ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பதில் அளிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்திருந்தார். தொடர்ந்து பதவியேற்ற உடனே சென்னை பெருநகரம் முழுவதும், குற்றப் பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு அதிரடி உத்தரவும் பிறப்பித்தார்.