வெள்ளை டி-சர்ட் இயக்கத்தை தொடங்கி வைத்தார் #RahulGandhi!
நாட்டில் நிலவும் சமத்துவமின்மைக்கு எதிராக போராடும் வகையில் 'வெள்ளை டி-சர்ட் இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,
"பிரதமர் மோடி அரசாங்கம் ஏழைகளையும் தொழிலாள வர்க்கத்தையும் புறக்கணித்து, அவர்களை முழுமையாக கைவிட்டுள்ளது. அரசாங்கத்தின் முழு கவனமும் குறிப்பிட்ட சில முதலாளிகளை வளப்படுத்துவதில் மட்டுமே உள்ளது. இதனால், சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், தங்கள் ரத்தத்தாலும் வியர்வையாலும் நாட்டை வளப்படுத்தும் தொழிலாளர்களின் நிலை மோசமாகி வருகிறது.
அவர்கள் பல்வேறு வகையான அநீதிகளையும், கொடுமைகளையும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு நீதியையும், உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க ஒன்றுபட்டு வலுவாக குரல் எழுப்ப வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும். இந்த சிந்தனையுடன் 'வெள்ளைச் டி-சர்ட்' இயக்கத்தை தொடங்குகிறோம். இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்க சகாக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்"
இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.