பிரசாரத்தில் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த புத்தகம்! அதிகரித்த அரசியலமைப்பு பதிப்பின் விற்பனை!
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகத்தின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இந்நிலையில், அதிகபட்ச தொகுதிகளில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று (ஜூன் 9) டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகத்தை உயர்த்திப் பிடித்தார். இது லக்னௌவைச் சேர்ந்த கிழக்கு புத்தக கம்பெனி (ஈஸ்டர்ன் புக்) வெளியிட்ட சிவப்பு கருப்பு நிற அட்டையிலான அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகம் என தெரியவந்துள்ளது.
தேர்தல் பொதுக்கூட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்த புத்தகத்தை கையில் ஏந்தியபடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான கடைசி வாய்ப்பு என்றும் பிரசாரம் செய்து வந்தார்.
இதையும் படியுங்கள் : உத்தரப்பிரதேசத்தில் கோர விபத்து! பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய 4 யூடியூபர்கள் உயிரிழப்பு!
இந்நிலையில், ராகுல் காந்தி கையில் உயர்த்திப் பிடித்திருந்த அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகத்தின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புத்தகத்தின் 10-வது பதிப்பை வெளியிட்டுள்ள கிழக்கு புத்தக கம்பெனி, இந்தாண்டு தொடங்கி 6 மாதங்களில் இதுவரை 5.000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஓராண்டு முழுவதுமே 5,000 புத்தகங்கள் மட்டுமே விற்பனை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு புத்தக கம்பெனியின் அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பை எழுதியவர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.