'Cold Coffee' போட்ட ராகுல் காந்தி - வீடியோ வைரல்!
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 'Cold Coffee' தயாரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செருப்பு தைக்கும் தொழிலாளி, முடி வெட்டும் தொழிலாளி, பெயிண்ட் அடிக்கும் நபர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடும் வீடியோ அவ்வப்போது வெளியாகி வைரலாகும். அந்த வகையில் ராகுல் காந்தி கோல்டு காஃபி போடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி பிரபலமான கெவென்டர்ஸ் கடைக்கு சென்றிருந்தார். அங்கு பணிபுரிபவர்களுடன் கலந்துரையாடிய அவர் 'Cold Coffee' தயாரித்தார். இது தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடையின் இணை நிறுவனர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி அவர்களின் திட்டங்கள் மற்றும் சவால்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் ஊழியர்கள் 'Cold Coffee'யை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறீர்களா? என்று ராகுலிடம் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி, "இல்லை, நான் அதைச் செய்வேன்" என்று பதிலளித்தார்.
பின்னர் அவர் பால், ஐஸ்கிரீமைச் சேர்த்து மிக்சியை இயக்கி, கெவென்டர்ஸின் சிக்னேச்சர் பாட்டிலில் பானத்தை ஊற்றுவதைக் காணலாம். கடைக்கு வருபவர்களுடன் ராகுல் உரையாடுவதையும் வீடியோவில் காணமுடிகிறது. ஒரு வயதான பெண்மணி அதே கட்டிடத்தில் தங்கியிருப்பதாகக் கூறி அவரை வீட்டிற்கு அழைக்கிறார். "நான் இரண்டு நிமிடங்களில் வருகிறேன்" என்று ராகுல் காந்தி அந்தபெண்மணிக்கு உறுதியளிக்கிறார்.