உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023ல் புனேவில் இன்று நடைபெற்ற நியூசிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர்களான குவிண்டன் டி காக் - டெம்பா பவுமா கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். 24 ரன்களில் டெம்பா ஆட்டமிழக்க, வான் டெர் டஸ்ஸன் களமிறங்கினார். அதன் பிறகு விளையாடிய டி காக் - டெர் டஸ்ஸன் கூட்டணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை திணறடித்தனர்.
உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே 3 சதங்களைப் பதிவு செய்த குவிண்டன் டி காக், இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி தனது 4-வது சதத்தைப் பதிவு செய்ததார். 114 ரன்களை குவித்த அவர், டிம் சௌதியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். தென்னாபிரிக்க வீரர் வான் டெர் டஸ்ஸன் 133 ரன்களை விளாசி டிம் சௌதியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி 357 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 358 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் மட்டுமே கடைசி வரை போராடி 50 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். தென்னாப்பிரிக்க வீரர்கள் கேசவ் மஹராஜ் மற்றும் மார்கோ யான்சன் தலா 4 மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்: இஸ்ரேலுக்கு எதிரான போரில் களமிறங்கிய ஏமன்!
இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில், 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.