உளவு குற்றச்சாட்டுக்கு எதிரான இந்திய மேல்முறையீட்டை ஏற்ற கத்தார்!
கத்தாரில் உளவு குற்றச்சாட்டில், 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த வழக்கில் கேப்டன் நவ்ஜீத் சிங் கில், கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கேப்டன் சௌரவ் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் புரேந்து திவாரி, கமாண்டர் சுகுநாகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் கோபகுமார் ஆகிய 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், கடற்படை அதிகாரிகளின் விடுதலைக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் எனத் தெரிவித்தது. மேலும், 8 பேரின் குடும்பத்தினரையும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து இந்திய சார்பில் 8 பேரின் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை தற்போது கத்தார் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.