ரஷ்யாவை சீண்டினால்... மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை!
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு, மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கினால், அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்த விரும்பும் பிராந்தியங்களுக்கு அதே போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்கள் விநியோகிக்குக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 3வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.
இந்த நிலையில், எங்கள் நாட்டுக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு, மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கினால், அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்த விரும்பும் பிராந்தியங்களுக்கு அதே போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்கள் விநியோகிக்குக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
இது குறித்து அவா் கூறியதாவது,
"ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உக்ரைனுக்கு தொலைதூர ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் அளித்துவருகின்றன. உக்ரைன் அந்த ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்தலாம் என்று சில நாடுகள் கூறிவருகின்றன. இது மிகவும் ஆபத்தான பிரச்னை.
எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயுதங்கள் வழங்கும் மேற்கத்திய நாடுகளுக்கு நாங்கள் அளிக்கும் பதில் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும். அது குறித்து பரிசீலித்து வருகிறோம். தாங்கள் அளிக்கும் ஏவுகணைக் கொண்டு ரஷ்யாவுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தலாம் என்று ஜொ்மனி அண்மையில் கூறியுள்ளது. அதன்படி ஜொ்மனி ஆயுதங்களால் நாங்கள் தாக்கப்பட்டால், எங்களுக்கும் ஜொ்மனிக்கும் இடையிலான உறவு முறிந்துவிடும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.