5வது முறையாக அதிபரானார் புதின்! - பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில் பதவியேற்பு!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 5வது முறையாக மீண்டும் ரஷ்ய அதிபராகியுள்ளார்.
ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதினின் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிட்டனர்.
இதையும் படியுங்கள் : “மிஸ் அமெரிக்கா” பட்டத்தை திருப்பி அளித்த நோலியா வோய்க்ட்! ஏன் தெரியுமா?
இந்த அதிபர் தேர்தலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி சார்பில் லியோனிட் ஸ்லட்ஸ்கி, புதிய மக்கள் கட்சி சார்பில் விளாடிஸ்லாவ் டாவன்கோவ், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிகோலாய் கரிடோனோவ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 88% வாக்குகள் பெற்று விளாடிமிர் புதின் மீண்டும் ரஷ்ய அதிபராக வெற்றி பெற்றார்.
இதையடுத்து, மாஸ்கோவின் கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அதிபர் விளாடிமிர் புதின் 5வது முறையாக ரஷ்ய அதிபராக இன்று (மே- 07ம் தேதி) பொறுப்பேற்றார். அரசியலமைப்பு புத்தகத்தின் மீது கை வைத்து அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதன் மூலம் 2030ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபர் புதினின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினை தொடர்ந்து அதிக ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தவர் என்ற சிறப்பை விளாடிமிர் புதின் பெற்றுள்ளார்.
கடந்த 1999ஆம் ஆண்டில் செயல் அதிபராக பதவியேற்ற புதின், தற்போது வரை சுமார் 25 வருடங்கள் அதிபராக நீடிக்கிறார்.
ரஷ்ய அதிபராக பதவியேற்ற பிறகு விளாடிமிர் புதின் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
"நாடு முழுவதும் வசிக்கும் ரஷ்யர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை பொறுத்தவரை நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம். அதற்கு நான் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறேன். தாய் நாட்டுக்காக போராடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிரான ஆக்கிரமிப்புக் கொள்கையைத் தொடர விரும்புகிறார்களா, அல்லது அமைதிக்கான பாதையைத் தேடுகிறார்களா? தேர்வு அவர்களுடையது என மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.