“விசில் போடு...!” – ‘GOAT’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை!
'விசில் போடு' பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்து, புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘The Greatest of All Time’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள் : சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்! – திரளான பக்தர்கள் தரிசனம்!
‘G.O.A.T.’ திரைப்படம் நடிகர் விஜயின் 68-வது திரைப்படமாகும். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மாஸ்கோவில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் அங்கு முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் துள்ளலான இசையில், விஜய் குரலில் ‘The Greatest of All Time’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ஏப். 14 தேதி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த விசில்போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இப்பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. முன்னதாக தென்னிந்திய சினிமாக்களில், வெளியாகி 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை கடந்த பாடலாக அரபிக் குத்து இருந்தது. தற்போது அரபிக் குத்து பாடலை பின் தள்ளி 'கோட்' திரைப்படத்தின் விசில் போடு பாடல் குறைந்த நேரத்தில் அதிக பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.