46ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை!
46ஆண்டுகளுக்கு பிறகு பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரிஜெகந்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையை ஜூலை 14-ஆம் தேதி திறக்கலாம் என ஒடிசா மாநில அரசு நியமித்த உயர்நிலைக் குழு சமீபத்தில் பரிந்துரைத்தது. இதன்படி இன்று பூரிஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த அறை திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஒடிசா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாக சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்கள் பூதாகரமாக பேசப்பட்டன. தற்போது ஆட்சியை பிடித்துள்ள பாஜக முன்னர் ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக இந்த விவகாரத்தை தீவிரமாக பரப்புரை செய்தது.
ரத்னா பந்தரை திறப்பதற்கு பல்வேறு 'சேவா' நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுக்கள், ஏஎஸ்ஐ அதிகாரிகள், ஸ்ரீ கஜபதி மகாராஜின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுப்பர். இந்த நிகழ்வின் முழு நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படும்.
ரத்னா பந்தரில் உள்ள மதிப்புமிக்க பொருட்களைத் திறப்பதற்கும் , கணக்கெடுப்பதற்கும் மூன்று வழிமுறைகள் பின்பற்றப்படும். முதலாவது வெளிப்புறத்தில் உள்ள ரத்னா பந்தரைத் திறப்பது. இதனைத் தொடர்ந்து அங்கேயே ஒரு தற்காலிக ஸ்டிராங் ரூம் அமைக்கப்படும். ரத்னா பந்தரிலிருந்து ஸ்டிராங் ரூமிற்கு மாறியதும் அங்கே கணக்கிடப்படும்” என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.