டிசம்பர் 31-ம் தேதி அன்று கடிகாரம் நள்ளிரவு 12 மணியை தொடும்போது, உலகமெங்கும் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டங்கள் அரங்கேறும். ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு விதமான கலாசாரங்களை, மரபுகளை பின்பற்றி புத்தாண்டை கொண்ட மகிழ்கிறார்கள். அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...
ஸ்பெயின்
கடிகார முள் 12-ஐ தொட்டதும் ஸ்பெயின் நாட்டினர், வேகவேகமாக திராட்சை பழங்களை சாப்பிடத் தொடங்குவார்கள். ஒரு நொடிக்கு ஒரு பழம் என்ற கணக்கில் கடிகார முன் ஒரு நிமிடத்தை தொடும்போது சரியாக 12 பழங்களை சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு திராட்சை யும் வரவிருக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று கருதுகிறார்கள்.
டென்மார்க்
உடைந்து, பயன்படுத்த முடியாமல் இருக்கும் தட்டுகளை பலரும் குப்பையில் வீசிவிடுவார்கள். ஆனால் டென்மார்க் நாட்டினர் அத்தகைய தட்டுக்களை ஆண்டு முழுவதும் சேகரித்து வைப்பார்கள். டிசம்பர் 31-ம் தேதி அன்று அந்த தட்டுக்களை வீட்டு வாசலில் உடைத்து போட்டு புத்தாண்டை வரவேற்பார்கள். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தட்டை உடைப்பதன் மூலம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். கிரான் சேகேஜ் எனப்படும் உயரமான கேக்கை அலங்கரித்தும் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
ஜப்பான்
புத்த மத கோயில்களில் 108 முறை மணி ஒலிக்கும். அந்த ஓசை, மனிதன் செய்த பாவங்களை போக்கும் என்று ஐப்பானியர்கள் நம்புகிறார்கள். அன்றைய தினம் தோஷிகோஷி சோபா என்ற நூடுல்ஸ் வகையை சாப்பிடுகிறார்கள். பழைய வருடத்திற்கு விடை கொடுக்கும் விதமாகவும், நீண்ட ஆயளுடனும், நல்ல அதிர்ஷ்டத்துடனும் புதியதை வரவேற்கும் விதமாகவும் இந்த உணவுமரபை பாரம்பரியமாக பின்பற்றுகிறார்கள்.
ஈக்வடார்
ஈக்வடார் மக்கள் பழைய ஆடைகள், காகிதங்கள். பரத்தூள் உள்ளிட்ட வற்றை கொண்டு பொம்மை தயாரித்து எரித்து புத்தாண்டை வர வேற்கிறார்கள். கடந்த ஆண்டில் நிகழ்ந்த எல்லா துரதிருஷ்டத்தையும் அது விரட்டுவதாக அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள்.
இத்தாலி
புத்தாண்டு தினத்தன்று கோட்சினோ இ லெண்டிச்சி எனப்படும் பன்றி இறைச்சி உணயை பாரம்பரியமாக உண்ணும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள், அது அதிர்ஷ்டத்தை அளிப்பதாக கூறப்படுகிறது. ஆண்கள் சிவப்பு நிற உள்ளாடையை விரும்பி அணியும் வழக்கத்தை யும் கடைப்பிடிக்கிறார்கள். அப்படி அணிந்தால் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் நிலவும் என்றும் நம்புகிறார்கள்.
தென் அமெரிக்கா
தென் அமெரிக்க நாடுகளான மெக்ரிகோ,பொலிவியா போன்ற நாடுகளில், சிவப்பு, மஞ்சள் நிற உள்ளாடைகளை அணிவார்கள். செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் நிலவுகிறது."
பிரேசில்
அமைதி, மறுபிறப்பின் அடையாளமாக வெள்ளை நிற ஆடைகளை பிரேசில் நாட்டினர் அணிகிறார்கள். சிலர் நள்ளிரவில் கடலுக்குச் சென்று அலைகளுக்கு மேல் குதிக்கும் வழக்கத்தை மேற்கொள்கிறார்கள். கடல் தேவதை யின் அருளைப் பெற தங்கம், பணம் உள்ளிட்டவற்றை கடலுக்குள் வீசுவார்கள்.
பிலிப்பைன்ஸ்
வட்டவடிவ பொருட்களை பயன்படுத்தினால் ஆண்டு முழுவதும் ஆனந்தம் நிலவும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதனால், வட்டவடிவடிசைன் கள் பதித்த ஆடைகளை அணிவார்கள். வட்ட வடிவ கேக்கை வெட்டி புத்தாண்டை வரவேற்பார்கள்.
அமெரிக்கா
நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டம் உலகப்புகழ் பெற்றது. பால் டிராப் எனப்படும் கிறிஸ்டல்களால் ஆன பந்து டைம்ஸ் சதுக்கத்தின் உச்சியில் இருந்து விடப்படும். அந்த நிகழ்வை காண லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.
துருக்கி
புத்தாண்டு பிறக்கும்போது வீட்டு வாசலில் உப்பை கொட்டி வைப்பார்கள். அப்படி செய்தால் ஆண்டு முழுவதும் அமைதியும், செழிப்பும் ஏற்படும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
- திருப்பதி கண்ணன்