புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம் - புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரி விடுதலை நாளையொட்டி முதலமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த நிலையில், 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரிக்கு விடுதலை
கிடைத்தது. இந்நிலையில் புதுச்சேரி விடுதலை திருநாள் இன்று அரசு சார்பில் கடற்கரை சாலையில் கொண்டாடப்பட்டது. விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு படைப்பிரிவினவரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ. 500 தீபாவளி முதல் ரூ. 1000 ஆக உயர்த்தப்படும். பரப்பளவில் புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் இந்தியாவில் உள்ள பெரிய
மாநிலங்களுக்கு இணையாக வளர்ந்துள்ளது. அரசு அறிவித்த திட்டங்களை முறையாக செயல்படுத்தி வருகின்றது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இயற்கைக்கு இடையூறு இல்லாத தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதன் மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்பை
ஏற்படுத்தப்படும். புதுச்சேரி துறைமுகத்திற்கும் சென்னை
துறைமுகத்திற்கும் இடையே சரக்குகளை கையாளும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று
வருகிறது.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
ரெ. வீரம்மாதேவி