புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு - குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி!
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார்.
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவர் மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள். 26 வயதான இருவரும் இரட்டையர்கள். இதில் ஹேமச்சந்திரன் பி.எஸ்சி., முடித்துவிட்டு டிசைனிங் பணியில் இருந்தார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட்டாக உள்ளார்.
ஹேமச்சந்திரனுக்கு உடல் எடை பிரச்னை இருந்து வந்துள்ளது. இவரது சுமார் 150 கிலோவுக்கும் மேல் இருந்ததால் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 22-ம் தேதி அவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே ஹேமச்சந்திரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் புதுச்சேரி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உயிரிழந்த இளைஞரின் உறவினர்களிடம் விசாரித்தார். மேலும், இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்தார். நேற்று இரவு தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் இளைஞரின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.