கேரளாவில் பொது விடுமுறை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு தொண்டர்கள் அஞ்சலி!
கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்த திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
இன்று காலை அவரது உடல் திருவனந்தபுரம் தர்பார் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கேரள அரசியலில் ஒரு சகாப்தமாக திகழ்ந்த அச்சுதானந்தன் மறைவு, கட்சி தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தர்பார் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, அச்சுதானந்தனின் உடல் நண்பகலுக்குப் பிறகு ஆலப்புழாவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
நாளை (புதன்கிழமை) காலை, அவரது உடல் சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதன் பிறகு ஆலப்புழா டவுன் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். இறுதியாக, நாளை மாலை ஆலப்புழாவில் உள்ள வலிய சுடுகாட்டு தகனக் கூடத்தில் முழு அரசு மரியாதையுடன் அச்சுதானந்தனின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரத்தில் இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருவதால், நகரின் சில பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.