தெலங்கானாவில் சர்ச்சைக்குரிய விளம்பரங்களை நீக்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு!
தெலங்கானா தேர்தலில் அரசியல் சூடு அதிகரித்து வரும் நிலையில் விதிமுறைகளை மீறிய தேர்தல் விளம்பரங்களை நீக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், விதிமுறைகளை மீறிய தேர்தல் விளம்பரங்களை நீக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் குழுவின் விதிமுறைகளை மீறியதால், அரசியல் கட்சிகள் தங்களின் சில விளம்பரங்களை நீக்குமாறு மாநிலத்தின் பிரதான கட்சிகளான பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
"குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்வதற்கான ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழுவின் முடிவுக்கு அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர், இனிமேல் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாது என்று உறுதியளித்தன" என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழுவின் விதிகளை மீறிய 15 விளம்பரங்களை திரும்பப் பெறுமாறு தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
"பாஜக, காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகளின் பின்வரும் அரசியல் விளம்பரங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை திரும்பப் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது அனைத்து மின்னணு ஊடகங்கள், சமூக ஊடக சேனல்களின் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, நவம்பர் 12-ஆம் தேதி, மாநில அளவிலான சான்றிதழ் குழு அனைத்து சேனல்கள் மற்றும் சமூக ஊடக தளங்களிலும் அரசியல் விளம்பரங்களை ரத்து செய்ய உத்தரவிட்டது. ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழுவின் விதிகளை மீறி இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதாக கமிட்டி தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2018 சட்டப்பேரவைத் தேர்தலில், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மொத்த வாக்குகளில் 47.4 சதவீதத்தைப் பெற்று 88 தொகுதிகளை வென்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.