வன்முறையாக மாறிய வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் - மேற்கு வங்கத்தில் மூவர் உயிரிழப்பு!
மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் முர்ஷிபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இதில் 15 காவல் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. பல அரசு வாகனங்கள், காவல் நிலையங்கள், ரயில்வே அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டன. மேலும் அங்கு இணையதளம் முடக்கப்பட்டது.
இந்த வன்முறை தொடர்பாக 110க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். இதனிடையே அப்பகுதியில் இணைதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த கலவரம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், ஏற்கேனவே இந்த சட்டம் மேற்கு வங்கத்தில் செயப்படுத்தப்படாது என்று அறிவித்ததை மீண்டும் உறுதி செய்ததோடு தயவுசெய்து அமைதியாக இருங்கள், நிதானமாக இருங்கள்.
மதத்தின் பெயரால் எந்த அநீதியான நடத்தையிலும் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது. அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டாதீர்கள் என பொது மக்களிடம் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து முர்ஷிபாத் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முர்ஷிபாத் மாவட்ட கலவரத்தில் மூன்று பேர் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. சம்ஷெர்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாஃப்ராபாத்தில் இன்று காலை கலவரத்தின்போது ஹர்கோபிந்தா தாஸ் மற்றும் அவரது மகன் சந்தன் தாஸ் (45) ஆகியோரை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி ராஜீவ் குமார், "ஜாங்கிப்பூரில் அமைதியின்மை சூழல் காணப்படுவதாகவும், வகுப்புவாத கலவரமும் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. எந்தவிதமான குண்டர்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் நிலைமையை மிகவும் வலுவாகக் கையாள்கிறோம். மனித உயிரைப் பாதுகாப்பது நமது பொறுப்பு" என்று கூறியுள்ளார்.