சொத்து பிரச்சனை - கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை வழக்கில் மனைவி கைது!
கர்நாடக முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஓம் பிரகாஷ் பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரின் உடலில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரகாஷின் மனைவி பல்லவி, சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஓம் பிரகாஷின் உடலை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக போலீசார் உடலை அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷின் மனைவி மற்றும் மகளிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விசாரணையில் பிரகாஷின் மனைவி பல்லவி சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் சமையறையில் இருந்த இரண்டு கத்தியால் ஓம் பிரகாஷை குத்திக் கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
இதையடுத்து போலீசார் பல்லவியை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று ஓம் பிரகாஷின் மகள் மூன்றாவது மாடியில் இருந்துள்ளார். இருப்பினும், அவருக்கும் கொலைக்கு தொடர்பு இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஓம் பிரகாஷின் மகனுக்கு காவல்துறை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் முறைப்படி புகார் அளித்தவுடன், அதிகாரப்பூர்வ தகவல்களை காவல்துறையினர் வெளியிடவுள்ளனர். தொடர்ந்து பல்லவியிடம் காவல்துறை மூத்த அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.