#ProKabaddiLeague | குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி!
புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தன. இதனையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று (நவ.24) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி மாறி பாயிண்ட்ஸ்களை அள்ளி குவித்தன.
இறுதியில் 31-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 43 - 30 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது.