மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் - கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்துக்கான சிஇ20 கிரையோஜெனிக் என்ஜின் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ககன்யான் திட்டத்தின் மூலம் தரையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இதையும் படியுங்கள் : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை | பயண திட்டம் வெளியீடு!
இத்திட்டத்தை 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக பல்வேறு கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனையானது ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வந்தது. அதன் இறுதிக்கட்ட பரிசோதனை திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் கடந்த 13 ஆம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், "மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்போது கலனின் தாங்கு திறன், செயல் திறன், நிலைத்தன்மை ஆகியவை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.