நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நார்வேயில் நடைபெறும் செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான டிங் லிரெனை வீழ்த்தியுள்ளார்.
நார்வேயில் நடைபெற்று வரும் செஸ் போட்டியில் 7- வது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென் உடன் இந்தியாவின் பிரக்ஞானந்தா மோதினார். கிளாசிக்கல் கேமில் போட்டி சமனில் முடிந்தது. பின்னர், ஆர்மகெடான் கட்டத்துக்கு சென்றது. பின்னர் இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றார். இதன்மூலம் பிரக்ஞானந்தா புள்ளிப் பட்டியலில் தன் நிலையை தக்க வைத்துள்ளார்.
ஏற்கனவே நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் டிங் லிரெனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சென் ஹிகரு நகமுராவிடம் ஆர்மகெடானில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் கர்ல்சென் 13 புள்ளிகளுடன் முதலிடத்தினை தக்க வைத்துள்ளார். ஹிகரு நகமுரா 12.5 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் பிரக்ஞானந்தா 11 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
இதையும் படியுங்கள் : “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அருகில் இருந்தது போன்ற அனுபவம் கிடைத்தது” – “காலம் உள்ளவரை கலைஞர்” கண்காட்சியை பார்வையிட்ட பின் விஜய் ஆண்டனி பேட்டி!
9 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் இன்னும் 2 சுற்றுகள் மட்டுமே மீதமிருக்கின்றன. நம்பர் 1, நம்பர் 2, நடப்பு உலக சாம்பியன் என ஜாம்பவான்களை பிரக்ஞானந்தா வீழ்த்தி உலக செஸ் தரவரிசையில் டாப் 10இல் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 8ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா மீண்டும் கார்ல்சென் உடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.