பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி... தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சில தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியாக இருந்த பவானி ஆற்றில் இம்முறை ஆண்டின் துவக்கத்திலேயே ஏற்பட்ட வறட்சி காரணமாக தண்ணீர் வரத்து முழுவதும் குறைந்துவிட்டது. இதனால் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு அமைக்கபட்ட குடி தண்ணீர் திட்டங்கள் முழுவதும் முடங்கி பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் பவானி ஆற்றில் அரசின் முறையான அனுமதி பெறாமல் சிலர் சட்டவிரோத தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் பத்திரகாளியம்மன் கோயில் அருகே தனியார் நிறுவனங்கள் சிலர் சட்டவிரோதமாக ஆற்றில் நேரடியாக மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த திருட்டிற்கு முறையான பாதுகாப்பு மற்றும் அனுமதி இன்றி மின்இணைப்புகளை பயன்படுத்தி தண்ணீறை திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்கள் குடி தண்ணீருக்கே அள்ளாடும் இந்த சூழலில் தனியார் குளிர்பதன கிடங்கு ஒன்று நீண்ட காலமாக தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய கள ஆய்வு செய்து சட்டவிரோத தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.