அடுத்த மாதம் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதன்படி நவம்பர் 7-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி வரை அடுத்தடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.
- சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் மோடி, தேர்தல் முடிவடைந்ததும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெற பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்துள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் அருகே புதிய ரயில்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது..
மேலும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே அமையவுள்ள இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பிரதமர் மோடியின் பயணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.