பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து!
இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டம் வரும் மே 9ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை மாஸ்கோவில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக ரஷ்யா அரசு அழைத்திருந்தது.
இருநாட்டு தலைவர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை, ராஜாங்க ரீதியான பேச்சு வார்த்தைகள் மட்டுமல்லாமல் வெற்றி நாள் விழா அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெற்றி நாள் விழா அணிவகுப்பில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ அறிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவை சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்குபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி நாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மே 8-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு உக்ரைன் உடனான போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.