பிரதமர் மோடி வருகை - சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..?
பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம்.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இப்போட்டிகளை நடத்துவது தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, ஜன.18 ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சரின் செயலர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, உள்துறை முதன்மைச் செயலர் பெ.அமுதா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு
வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொதுவாக
அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும், ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு காவல் துறை தெரிவித்துள்ளது.
வணிக வாகனங்களுக்கான கட்டுப்பாடு :
அண்ணா வளைவு முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக
வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா வளைவில் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.
பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு,
மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக
திருப்பி விடப்படும்.
ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹன்டர்ஸ் ரோடு ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயிண்ட்(டாக்டர் அழகப்பா சாலை X ஈ.வி.ஆர் சாலையை சந்திப்பு) வழியாக சென்றடையலாம் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.