இன்று கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக இன்று கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.
7ம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் மாலையுடன் நிறைவடையும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை இன்று முதல் 3 நாள் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். தேர்தலுக்கு முன்னர் இந்தாண்டு தொடக்கம் முதல் ஏப்ரல் மாதம் வரை மோடி பலமுறை தமிழ்நாடு வந்து சென்றுள்ளார்.
இதற்காக அவர் இன்று வாரணாசியில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக திருவனந்தபுரத்திற்கு வருகிறார். அங்கிருந்து பிற்பகல் 3:55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். இங்கு அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் இருந்து தனி படகு மூலமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார்.
ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும். மற்றொரு அறையில் சமையல் அறையும் மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அறையில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஜூன் 1-ந்தேதி மதியம் 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனி படகு மூலமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்திற்கு வருகிறார்.
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.