இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 23 முதல் ஜூலை 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுகள் ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்த சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார். பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மன்னர் சார்லஸ் III ஐ சந்திக்க உள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இங்கிலாந்திற்கு மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும். மேலும் இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதை தொடர்ந்து, ‘மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடியின் மாலத்தீவு அரசு முறை பயணம் ஜூலை 25 ஆம் தேதி தொடங்கும். ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் மாலத்தீவின் 60வது சுதந்திரதின ஆண்டு விழாவில் பிரதமர் மோடி "கவுரவ விருந்தினராக" கலந்து கொள்வார். இந்தப் பயணத்தின்போது இந்திய பிரதமரும், மாலத்தீவு அதிபரும் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலத்தீவிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 3வது பயணம் இதுவாகும்.