டி20 உலகக்கோப்பை | இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து...
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்புகளை அளித்து விளையாட்டை சுவாரஸ்யமாக்கினர். இந்நிலையில், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், எங்கள் அணி டி20 உலகக் கோப்பையை ஸ்டைலில் வீட்டிற்கு கொண்டு வருகிறது! இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”எங்கள் #MenInBlue அவர்களின் இரண்டாவது #T20 உலகக் கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சி!
நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனையுடன் முடித்தது. வாழ்த்துகள், இந்திய அணி” எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் ட்விட்டரில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட பதிவில், "ஒருபோதும் தளராத மனப்பான்மையுடன், கடினமான சூழ்நிலைகளை சமாளித்து, போட்டி முழுவதும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி, டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஒரு அசாதாரண வெற்றியாகும். டீம் இந்தியா உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்!" என்று கூறியுள்ளார்.இவர்களை தவிர, எதிர்க்கட்சித் தலைவரும் ரேபரேலி எம்பியுமான ராகுல் காந்தி, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துணைத் தலைவர் ஜட்கீப் தங்கர் ஆகியோரும் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.