அரசு முறை பயணம் - செப்டம்பர் 21ம் தேதி #America செல்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் , மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை பாஜக பல்வேறு பகுதிகளில் கொண்டாடியது.
பிரதமர் மோடி சமீபத்தில் அரசுமுறை பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் சென்றிருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக செப்.21ம் தேதி அமெரிக்கா செல்கிறார். வரும் 21ம் தேதி அமெரிக்காவின் வில்மிங்டனில் நடைபெற உள்ள குவாட் கூட்டமைப்பின் 4வது மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து, செப்.22ம் தேதி இந்திய வம்சாவளி மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பின்னர் செப். 23ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்சியின்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபடவுள்ளார்.