“வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் மோடி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பிரதமர் நரேந்திர மோடி வெறும் கையால் முழம் போடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, அந்த மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தருமபுரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது :
“தருமபுரி என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது ஒகேனக்கல். 2008-ம் ஆண்டு ஜப்பான் நாட்டிற்கு சென்று நிதி பெற்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். தருமபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியில் இங்கு நிற்கிறேன்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முகாம் தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டது. பெண்ணினத்திற்கு திமுக வழங்கிய மிகப்பெரிய அதிகார கொடை, சொத்தில் சமபங்கு சட்டம். மகளிர் சுய உதவி குழு தொடங்கப்பட்ட இடம் தருமபுரி. மாணவர்கள், உழவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பயன்பெறுகின்றனர்.
அனைத்து மாவட்டங்களையும் சமமாக மதித்து செயல்படும் அரசு தான் திராவிட மாடல் அரசு. ஆனால் பாஜக அரசு, மாநிலங்களை சமமாக மதிப்பது இல்லை. மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறது. நிதி ஆதாரத்தை அழிக்கிறது. பிரதமர் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் மக்கள் அதை வெற்றுப் பயணமாக பார்க்கிறார்கள். தேர்தல் வரக்கூடிய நேரத்தில் மட்டும்தான் மக்களை சந்திக்கிறார் மோடி.
இதையும் படியுங்கள் : அதிமுக உடனான தொகுதி பங்கீட்டில் அதிருப்தி - பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு?
சிலிண்டர் விலையை 10 ஆண்டுகளாக 500 ரூபாய் உயர்த்தி விட்டு, இப்போது வெறும் 100 ரூபாய் குறைக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க விடமாட்டேன் என பிரதமர் கூறுகிறார். ஆனால் வளர்ச்சி நிதியை அவர் வழங்கவில்லை. மாநில அரசின் பணத்தை வாங்கி தான் பிரதமர் தனது ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கிறார். வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மக்களும், திமுக அரசும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். கோடிக்கணக்கான குடும்ப மக்களுக்கான ஆட்சி இது.”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.