நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!
'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரூ.24,470 கோடியில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் ஒரு வருடமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம், தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. நாடு முழுதும் 103 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தானில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று (மே 22) திறந்து வைத்தார்.
இதையும் படியுங்கள் : தேர்வில் தோல்வியடைந்த மகன்கள்.. விரக்தியில் தந்தை எடுத்த விபரீத முடிவு – நாமக்கலில் சோகம்!
தமிழ்நாட்டில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர், குழித்துறை ஆகிய 9 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்கள் புட் கோர்ட், சிறுவர் விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
மேலும், இந்த ரயில் நிலையங்களில் தனித்தனி உள் நுழையும் மற்றும் வெளியேறும் வாசல்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி, மின்னுயர்த்தி, எக்சிகியூட்டிவ் லான்ஜ், காத்திருப்புப் பகுதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் அழகை தக்கவைக்க மின் சிக்கனம் மற்றும் பசுமைப் பாதுகாப்புத் திட்டங்களுடன் கட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாஹே அம்ரித் பாரத் ரயில் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.